திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் , சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் நேற்று கிருத்திகை விழா விமர்சையாக நடைபெற்றது.
இந்த கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நட்சத்திரம் என்பதால் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தனம் ,மஞ்சள், பால் ,தயிர் பஞ்சாமிர்தம், இளநீர், போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பிறகு சுவாமி தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த கிருத்திகை தினத்தை முன்னிட்டு சுவாமியை வழிபட ஆந்திரா ,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் , மொட்டை அடித்தும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.