Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இறந்துட்டு… அடக்கம் செய்யும் நேரத்தில் நடந்த அதிசயம்… மருத்துவர்களின் அலட்சியம்…!!

தேனி மாவட்டத்தில் இறந்து பிறந்ததாக கூறிய குழந்தை அடக்கம் செய்யும் நேரத்தில் கையை அசைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாசில்தார் நகரில் பிலவேந்திரராஜா(33) என்பவர் அவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் பாத்திமா 3வதாக கர்ப்பமாகி இருந்துள்ளார். இந்நிலையில் பாத்திமாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ள நிலையில் குடும்பத்தினர் அவரை தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து நள்ளிரவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறக்கும்போதே குழந்தை இறந்து பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட உறவினர்கள் மிகவும் மனமுடைந்து கதறி அழுதுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலையில் பாத்திமாவின் குடும்பத்தினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் குழந்தையை பெரியகுளத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அப்போது குழந்தையின் கைகள் அசைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக தேனி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இறந்துவிட்டதாக கூறிய குழந்தை உயிருடன் வந்ததை பார்த்த மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்து குழந்தையை இன்குபேட்டரில் செயற்கை சுவாசம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலவேந்திரராஜாவின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் முரளிதரனும் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பாத்திமாவுக்கு பிறந்த குழந்தையை முழுவதுமாக பரிசோதனை செய்யாமல் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்களும், செவிலியர்களும் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவமனை டீன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |