கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்த கன மழையினால் பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டு அருகில் மண் சுவரில் ஓலைக் கொட்டகை அமைத்து அதில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக பின் மீண்டும் பட்டியில் அடைந்திருந்தார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு ரமேஷ் சென்று பார்த்தபோது மண்சுவர் கூரையுடன் இடிந்து விழுந்து அதற்குள் ஆடுகள் சிக்கியிருந்தது.
இதனால் ரமேஷ் ஆடுகளை மீட்பதற்கு முயற்சி செய்தபோது இடிபாட்டில் மாட்டி 11 ஆடுகளும் உயிரிழந்து விட்டது. அதன்பின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 ஆடுகளை ரமேஷ் உயிருடன் மீட்டெடுத்தார். அதில் 2 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து ஏரிகுத்தி கால்நடை மருத்துவர் தமிழரசன் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 2 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து இறந்த ஆடுகளுக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.