திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பயணிகளிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மத்தியில் அமைந்திருக்கும் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இன்று பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு எதிர் புறம் நடந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவரது சட்டைப் பையிலிருந்த கைபேசியை எடுத்து கொண்டு ஓடினர்.
தப்பித்து ஓடும் பொழுது அந்த பயணி கூச்சலிட டீ கடை மற்றும் சாலையோர கடைகளில் இருந்த இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இரண்டு இளைஞர்களின் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் எதனால் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் உள்ளிட்ட கோணத்தில் காவல்துறையினர் விசாரித்ததில் இவர்கள் ஆடம்பர செலவுக்காக செயின் பறிப்பு மற்றும் மொபைல் பறிப்புகளில் ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிந்துள்ளது. மேலும் வேறு யாரும் கல்லூரி மாணவர்கள் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.