கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அவர்கள், தொடர் கண்காணிப்பில் இருக்கும் வகையில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்று தமிழக அரசு மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தற்போது மக்கள் அனைவரும் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர்.
பொதுமக்களுக்கு தடுப்பூசி பணி தடை ஏற்படாமல் இருக்க போதுமான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதனை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறிவதற்கான ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை வரக்கூடாது. வரவும் வேண்டாம். இருப்பினும் மக்கள் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.