பெண் குழந்தையை பெற்ற தாயையும், அந்த குழந்தையையும் தந்தை வீட்டினர் பூத்தூவி உற்சாகமாக வரவேற்ற சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். பலரும் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், உம்னாபாத் டவுன் பசவநகரை சேர்ந்த ரோகித், என்பவரின் மனைவி பூஜா. ரோகித் இன்ஜினியராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். பூஜா கல்லூரி விரிவுரையாளராக உள்ளார். இவர் கர்ப்பமாக இருந்தார்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பூஜாவுக்கு இது முதல் குழந்தை என்பதால் அவரது தந்தை வீட்டில் பிரசவம் பார்த்தனர். குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு தனது கணவன் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி இவர் குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் போது அந்தக் குழந்தைக்காக கணவர் வீட்டில் பூ பாதை அமைத்து, அவர் நடந்து வரும்போது அனைவரும் உற்சாகமாக, பூப்போட்டு குழந்தையை வரவேற்றனர். இதை சற்றும் எதிர்பாராத பூஜா கண்ணீர் விட்டு அழுதார். இதுதொடர்பான வீடியோவும் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.