முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு இன்றுடன் 30 நாட்கள் பரோல் முடிவடைந்த நிலையில் மேலும் 30நாட்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், 30 ஆண்டுகள் சிறையில் இருந்த காரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம், ரத்த அழுத்தம் என பல்வேறு உடல்நல குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் பேரறிவாளன் தொடர்ந்து தடை இல்லாமல் சிகிச்சை பெறும் வகையில் பரோல் அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.