நேபாளத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நடப்பாண்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி போடும் பணியில் 70 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து அரசியல் குழப்பம் மற்றும் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக நேபாளத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக போதிய அளவில் முதியவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. எனவே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட முதியவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் ஆபத்து பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் “தனது 100 வயது பாட்டியை கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அழைத்து சென்றபோது அவர் முதலில் பயந்ததாகவும், தடுப்பூசி போட்ட பிறகு மகிழ்ச்சி அடைந்ததாகவும்” ஸ்நேகா சாக்யா என்பவர் கூறியுள்ளார். மேலும் நேபாள நாட்டில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி இதுவரை சுமார் 14 லட்சம் மூத்த குடிமக்களுக்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.