அன்னை தெரசாவின் வாழ்நாள் சாதனைகளில் சிலவற்றை உங்களுக்கு தற்பொழுது நினைவுபடுத்த கடமைபட்டிருக்கிறோம்.
கருணையின் மறுஉருவம் என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரசா. அல்பேனியாவில் பிறந்த இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. கிறிஸ்துவ மறை போதகர்களின் சேவையால் பெரிதும் ஈர்க்கப்பட்டு 12 வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தனது பதினெட்டு வயதில்தான் முழுநேர சேவையில் ஈடுபட நினைத்து மறை பணியாளராக தன்னை இணைத்துக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு இந்தியா வந்த மதர் தெரசா மக்களின் ஏழ்மை நிலையைக் கண்டு வருத்தம் அடைந்தார்.
இந்தியா தான் இனி என் தாய் நாடு என முடிவெடுத்து கொல்கத்தாவில் பணி செய்ய ஆரம்பித்தார். மிஷினரீஸ் ஆப் சாரிட்டீஸ் என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவினார். காந்தி பிரேம் நிவாஸ் என்ற பெயரில் நிரந்தர மருத்துவமனையைத் தொடங்கினார். சிறை கைதிகளுக்கும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை மையங்கள் மூலமாக உதவிகள் செய்துவந்தார். அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஆகியவற்றைப் பெற்றவர் மதர் தெரசா.