கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் திடீரென ஒன்றாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாரதாமணி லே – அவுட் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு பிரமுகர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீடுகளிலிருந்து வெளிவரும் கழிவு நீரானது வீதியில் குளம்போல் தேங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் பொதுமக்கள் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அந்தப் பிரமுகரிடம் கழிவுநீரை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொதுமக்கள் சொல்வதை அந்த பிரமுகர் கண்டு கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து 70 – க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்றாகத் திரண்டு அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அதிகரி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.