நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமையில் வாழைத்தார் ஏல சந்தை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பரமக்குடி தாசில்தார் சுந்தரவல்லி, துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து ஏல சந்தை ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், புதன், சனிக்கிழமை என 3 நாட்கள் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்பட அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் விற்பனை முகவர்களின் பெயர், செல்போன் நம்பர், முகவரி ஆகியவை முறையாக பராமரிக்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தையில் கலந்துகொள்ளும் விவசாயிகள் மற்றும் முகவர்கள் 70 பேருக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பரமத்திவேலூர் தோட்டக்கலை துறையினர், விற்பனை குழுவினர் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.