காணாமல் போன நர்சிங் மாணவி கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் பகுதியில் நர்சிங் மாணவியான வினோதினி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளில் அந்த மாணவி கலந்து கொள்ளாமல் இருப்பதை அவரது தந்தை வினோத் குமார் கண்டித்துள்ளார். இதனால் நர்சிங் மாணவியான வினோதினி பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார். இதனை அடுத்து வினோதினியின் பெற்றோர் அவளைக் காணவில்லை என காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையில் மேற்கொண்டபோது அரப்பாக்கம் கல்குவாரியில் தேங்கியுள்ள மழைநீரில் நர்சிங் மாணவியான வினோதினி சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வினோதினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.