ஜெர்மனியில் காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 60 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் ஒரு குடியிருப்பு, பல நாட்களாக ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. எனவே பல பேர் கொண்ட கும்பல் அங்கு குடியேறியிருக்கிறார்கள். மேலும் சட்டவிரோதமான செயல்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அங்கு சென்ற காவல்துறையினர் அந்த கும்பலை வெளியேறுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் 200க்கும் அதிகமான நபர்கள் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் துணியால் முகங்களை மூடிக்கொண்டு கற்கள் மற்றும் பாட்டில்களை காவல்துறையினர் மீது வீசத் தொடங்கியுள்ளனர். இதில் காவல்துறையினர் பலர் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற போராடியுள்ளனர்.
ஆனால் அவர்கள் அருகில் இருக்கும் கட்டிடங்களின் மேற்பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் தடுப்புகளையும் தீ வைத்து எரித்துள்ளனர். எனவே காவல்துறையினர் தண்ணீரை பாய்ச்சி நெருப்பை அணைத்திருக்கிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.