3 மாதங்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
ஜப்பான் நாட்டில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் அமைந்த தாராளவாத ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜப்பானின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. மேலும் இந்த கூட்டத்தொடரை 3 மாதங்களுக்கு நீட்டிக்க எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . இந்த கூட்டத்தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கும் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது அவசரகால நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்கும் நாடாளுமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் பிரதமர் யோஷிஹைட் சுகா பல்வேறு சிக்கல்களை விவாதிப்பதற்காக இந்த கூட்டத்தொடரை நீட்டிப்பது பொருத்தமாக இருக்காது என்று கூறி எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இதனால் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்டு, ஜனநாயக, அரசியலமைப்பு ஜனநாயக மற்றும் சமூக ஜனநாயக ஆகிய 4 கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். இதனால் நம்பிக்கையற்ற தீர்மானம் மீது விரைவில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தில் தாராளவாத ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடத்தை பெற்றுள்ளதால் இந்த நம்பிக்கையற்ற தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.