ரோந்து பணிக்கு சென்ற காவல்துறையினர் வலிப்பு ஏற்பட்ட குழந்தையை காப்பாற்றியதற்காக போலீஸ் சூப்பிரண்டு 500 ரூபாய் மட்டும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள சன்னாநல்லூர் பகுதியில் முத்துகுமாரசுவாமி-மெல்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது குழந்தை சுகன்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கணவன்- மனைவி இருவரும் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டது. இந்த நேரத்தில் திடீரென குழந்தை சுகன்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றது. இந்நிலையில் ஊரடங்கு நேரம் என்பதனால் ஆட்டோ, கார் எதுவும் இல்லாமல் கணவன்- மனைவி இருவரும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் காரில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் வலிப்பு ஏற்பட்ட குழந்தை மற்றும் கணவன்- மனைவி இருவரையும் வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நலம் பெற்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நேரில் அழைத்து திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.