வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஒரு மூட்டையை வைத்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த மூட்டையில் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சா இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
மேலும் விசாரணையில் ரமேஷான இவர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் தங்கி அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்தது அம்பலமானது. இதனையடுத்து ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.