வங்கியின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வங்கியின் முன்பு 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒரே இடத்தில் கூடியிருந்தனர்.
இதனை அடுத்து வங்கி ஊழியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளி பின்பற்றி வரிசையாக நில்லுங்கள் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நாளொன்றுக்கு 10 முதல் 20 பேர்கள் மட்டும் வங்கிக்கு வர வேண்டும் எனவும், அவர்கள் பணம் பரிவர்த்தனை செய்வதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர். இவ்வாறாக செய்தால் பொது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.