பெண் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் கணவனை இழந்த சித்ரா செல்வி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகாசி பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருடன் சித்ராவிற்குக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரமேஷும், சித்ராவும் வசித்து வருகின்றனர். இதில் ரமேஷுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த ரமேஷ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து சித்ராவின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபர்கள் அவரை பார்ப்பதற்காக சென்றபோது காயங்களுடன் சித்ரா சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு தலைமறைவாக இருக்கும் ரமேஷ் பிடிபட்டால் தான் சித்ராவின் இறப்பிற்கான உண்மை காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.