பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகையை மோசடி செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் அய்யனாரின் மனைவியான பேச்சியம்மாள் என்ற பெண்ணிடம் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினை தீரும் என்று கூறி முத்துராமலிங்கம் பூஜை நடத்தியுள்ளார். இதனை அடுத்து முத்துராமலிங்கம் பேச்சியம்மாள் கொடுத்த 7 பவுன் தங்க நகையை அங்கிருந்த கலசத்தில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனை 40 நாட்கள் கழித்து திறந்து பார்க்குமாறு பேச்சியம்மாளிடம் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி 40 நாட்கள் கழித்து அதைத் திறந்து பார்த்தபோது நகை காணாமல் போனதை கண்டு பேச்சியம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பேச்சியம்மாள் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துராமலிங்கத்தை நகை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முத்துராமலிங்கத்திற்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் பாதுகாப்புடன் கோவில்பட்டி தனியார் கல்லூரி சிகிச்சை மையத்தில் முத்துராமலிங்கத்தை அனுமதித்துள்ளனர். இதேபோன்று பரிகார பூஜை நடத்துவதாக மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றியதாக முத்துராமலிங்கம் மீது புகார் வந்துள்ளது.