இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் (வயது 34) மூன்று வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றிரவு அறிவித்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி எதிரணி பேட்ஸ்மேன்களை தனது ஸ்பின்னர் ஆல் மிரள வைத்தவர். அதற்குச் சான்றாக 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டத்தில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 19 போட்டியில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர். சமீபகாலமாக இலங்கை அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு தனது அணிக்காக விளையாடியுள்ளார். அஜந்தா மெண்டிஸ் 19 டெஸ்ட் போட்டியில் 70 விக்கெட்டுகளும், 87 ஒருநாள் போட்டிகளில் 152 விக்கெட்டுகளையும் டி20 கிரிக்கெட்டில் 66 விக்கெட்டும் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 288 விக்கெட்டுகளை மெண்டிஸ் வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச அளவில் டி 20 கிரிக்கெட் போட்டியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடமும் அவருக்கு தான் 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.