மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.97.43 க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.91.64 க்கும் விற்பனையான நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.97.69க்கும் , டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 91.92க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4ம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட அறிவிப்பை உடனே அமல்படுத்த வேண்டுமென்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஸ்டாலின் விரைவில் பரிசீலனை செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.