பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் பெயிண்டரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித் குமார் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது தன்னை காதலித்த ரஞ்சித் குமார் தான் இதற்கு காரணம் என்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கர்ப்பமாக்கிய ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர். அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் சில மாதங்களுக்கு முன்னர் தைலமரக்காட்டில் சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை ரஞ்சித் குமார் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.