தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் ஜூன் 21-ஆம் தேதிவரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி; டேக்ஸிகளில் ஓட்டுனர் தவிர 3பேரும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2பேரும் பயணிக்கலாம்.இதனை தவிர ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் அமலில் இருக்கும். காய்கறி, மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்படும்.