கடன் தொல்லை அதிகரித்ததால் இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் 2-ஆவது மதகு அருகில் இளம்பெண்னின் சடலம் கிடப்பதாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மதுரவாயல் பகுதியில் வசித்த ராதா என்பது தெரியவந்துள்ளது.
இவர் சொந்தமாக வீடுகட்டி வருவதால் அதற்காக தேவைப்படும் பணத்தை பலரிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் ராதா ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் பணம் இல்லாததால் வீட்டை கட்ட முடியாமலும், சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமலும் ராதா சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும் கடன் தொல்லை அதிகரித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதா கணவரிடம் தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டுள்ளார். அதன்பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து ராதா தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.