தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் உள்ளனர். மக்களுக்கு வேண்டிய நிதி உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் அரசின் இவ்வாறான நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.