நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோத்துப்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள அச்சரப்பாக்கம் மலை பக்கத்தில் உள்ள பள்ளிப்பேட்டை மலை, வனம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலப்பரப்புகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 65 ஏக்கருக்கும் மேல் நில ஆக்கிரமிப்புகள் செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் மயில்கள், மான்கள், வாழ்வாதாரம் பாதித்து இடப்பெயர்ச்சி செய்து வாழ்கிறதா என்பது தெரியவில்லை.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ராஜா என்பவர் செய்த மனு தாக்கலை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ மற்றும் தாசில்தார் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் தொடர்பான அறிக்கையை 4 வாரத்திற்குள் வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினர். இதனையடுத்து நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மதுராந்தகம் தாசில்தார் மட்டத்திலும், வருவாய் ஆர்.டி.ஓ மட்டத்திலும், கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் விரிவான விசாரணை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அச்சரப்பாக்கம் பள்ளிபெட்டை ஊராட்சியில் உள்ள மழை மலை மாதா ஆலயம் அமைந்துள்ள மலை மற்றும் அதன் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு இடங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ லட்சுமி பிரியா, மதுராந்தகம் தாசில்தார் பர்வதம்மாள், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, வீரமுத்து மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்.