உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் வருகிற 18ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 4 ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீரர்கள் இங்கிலாந்து சென்று மறுபடியும் , பயோ-பபுளில் இணைந்துள்ளனர். மைதானத்தை ஒட்டி உள்ள ஹோட்டலில் வீரர்கள் தங்கியிருப்பதால், மைதானத்தை தவிர வெளியில் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது.
‘ பயோ-பபுளில் இருப்பது மிகவும் கடினமானது.இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்தவுடன் , வீரர்களுக்கு கிடைக்கும் ஓய்வு அவர்களுக்கு நிச்சயம் உற்சாகத்தை அளிக்கும். இது போன்ற நீண்ட தொடர்களில் வீரர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் ஒருங்கிணைந்து, விளையாடுவதற்கு இந்த இடைவெளி அவசியமாகும்’ என்று கேப்டன் விராட் கோலி முன்பே தெரிவித்திருந்தார் . இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன், இந்திய வீரர்கள் அனைவருக்கும் 3 வாரங்கள் ஓய்வளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த 3 வாரங்கள் ஓய்வுக்குப் பின் ஜூலை 14-ஆம் தேதி மீண்டும் வீரர்கள் இணைவார்கள். இதனால் இந்த ஓய்வு நாட்களில் வீரர்கள் பயோ-பபுளில் இருக்க வேண்டியதில்லை. அதோடு பெரும்பாலான வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் இங்கிலாந்திற்கு சென்றிருப்பதால் வெளியில் சுற்றிப் பார்க்க செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.