சீனாவில் கடந்த 3-ஆம் தேதி 15 காட்டு யானைகள் வழிமாறி நகர் பகுதிக்குள் நுழைந்துள்ளன.
சீன நாட்டின் யோனன் மாகாணத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஹூன்னிங் எனும் நகரத்திற்குள் கடந்த மூன்றாம் தேதி வழிமாறி நுழைந்த 15 காட்டு யானைகள் அங்குள்ள வீடுகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சுற்றி திரிந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் அவை அனைத்தும் கடைகளில் கிடைக்கும் பழங்களை உண்டு வருவதோடு அங்கு நடமாடும் பொதுமக்களையும் விரட்டுகின்றனர்.
எப்போதும் வனப்பகுதியை நோக்கி செல்லும் இந்த காட்டு யானைகள் எதிர்பாராதவிதமாக கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி 480 கிலோ மீட்டர் தூரம் எதிர்திசையில் பயணம் செய்துள்ளது. இதையடுத்து அந்த காட்டு யானைகள் அனைத்தும் கடந்த 3-ம் தேதி ஹூன்னிங் என்ற நகர்ப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நகர் பகுதியில் சுற்றித் திரியும் இந்த காட்டு யானைகளை காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 480 கி.மீ பயணம் செய்த களைப்பில் ஓய்வெடுப்பதற்காக காட்டு பகுதிக்கு செல்லும் அந்த யானைகளை அதிகாரிகள் டிரோன் கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இவ்வாறு காட்டுபகுதிக்குள் சென்று ஓய்வெடுக்கும் அந்த யானைகளுடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.