சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் தரவேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கியை வலியுறுத்த கோரி 12 மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 முதலமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: “தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு ஒற்றை அமைப்பாக மத்திய அரசே செயல்பட வேண்டும் என்ற கருத்தை மாநில முதல்வர்கள் பலர் சுட்டிக்காட்டினோம்.
மத்திய அரசு முழு அளவில் கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று நாம் தெரிவித்திருந்தோம். அனைவரின் கூட்டு முயற்சி காரணமாக பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்கள் தொற்று காரணமாக பல பிரச்சினைகளில் உள்ளன. இதனால் மீண்டும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் மாநில அரசுகளால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடனை திருப்பி செலுத்துவதை தள்ளி வைத்து, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று கூட்டு வலிமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.