இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் இந்தியாவிற்கு பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதித்த நாடுகளுக்கு உதவும் வகையில் 8 கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கும் என்றும், அதில் பெரும் பங்கு இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். ஆனால் இந்தியாவிற்கு அது போதாது என்று அமெரிக்க எம்பிக்களும், மாகாண கவர்னர்களும் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக டெக்சாஸ் கவர்னர், பைடன் இந்தியாவுக்கு அதிக தடுப்பூசிகள் அனுப்ப வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.