பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்திரனிடம் அவரது மலையாள படங்களில் தமிழின் தாக்கம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் . இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் ‘நான் பிரேமம் கதையை எழுதிய போது முதலில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை அசினை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த கதாபாத்திரத்தை கொச்சியை சேர்ந்தவராக வடிவமைத்திருந்தேன். ஆனால் நடிகை அசினை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராக மாற்றி அமைத்தேன். நான் எனது கல்லூரி படிப்பை சென்னையில் படித்ததால் எனது படங்களில் தமிழின் தாக்கம் அதிகமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.