குடியாத்தம் அருகில் செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் பிடித்து காப்புக் காட்டுக்குள் விட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆர். கொல்லப்பல்லி கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக செங்கல் சூளை ஒன்று இருக்கின்றது. அந்த செங்கல் சூளை அருகில் பொதுமக்கள் சென்றபோது அங்கு ஏதோ சத்தம் வந்ததால் அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த செங்கல் சூளையில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்து இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் காந்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் வனத் துறையினரிடம் தகவல் கொடுத்து வனவர் மாசிலாமணி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பொதுமக்களின் உதவியுடன் பிடித்து மோர்தானா காப்புக் காடுகள் மூங்கில் புதர் பகுதியில் மலைப்பாம்பை விட்டனர்.