உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு காப்பா, டெல்டா என புதிய பெயர்களை சூட்டியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த நாட்டின் பெயரால் இந்த வைரஸ்களை அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இத்தகைய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “உலக சுகாதார நிறுவனம் இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களை குறிப்பிட வசதியாக புதிய பெயர்களை அறிவிக்கிறது. அந்த பெயர்கள் தற்போதைய அறிவியல் பெயர்களுக்கு மாற்று கிடையாது என்றும், பொது விவாதத்துக்கு உதவும் வகையில் இருக்கும்” என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617.1 காப்பா என்றும், அதன்பின் கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.1.7 ஆல்பா என்றும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீ.1.351 வைரசுக்கு பீட்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல் பிரேசிலில் கண்டறியப்பட்ட பி.1 வைரஸ்க்கு காமா என்றும், பி.2 வைரசுக்கு ஜீட்டா என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வைரஸ்களுக்கு அயோட்டா மற்றும் எப்சிலான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் புதிய பெயர்களை சூட்டியுள்ளது.