ஊரடங்கு விதிமுறைகளை மீறி நூற்பாலையை இயக்கிய தொழிற்சாலைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்னும் பகுதியில் 10 வருட காலமாக நூற்பாலைகள் பல இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இப்போது கொரோனா தாக்குதலால் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தொழில் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நூற்பாலையில் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடப்பட்டது. அப்படி அறிவிப்பு விடப்பட்ட நிலையிலும் ஒரு நூற்பாலை மட்டும் இரண்டு நாட்களாக இயங்கி வந்துள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த அவ்ஊராட்சி தாசில்தார் கனிமொழி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவகுமார், கிராம உதவியாளர் மூவரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு கொரோனா கால முழு ஊரடங்கு நேரத்திலும் இயங்கி வந்த நூற்பாலையை நேரில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசின் விதிமுறைகளை மீறி நூற்பாலையை இயக்கியதால் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு உரிமையாளரையும் கண்டித்து உள்ளனர். மேலும் காரத்தொழுவு என்னும் பகுதியிலும் ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட டீ கடைக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.