அரியலூர் மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 40,000 ரூபாயை திருடி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி சாந்தினி(38). தற்போது இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் ஏதேனும் விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து நாயக்கர் பாளையத்தில் இருக்கும் ஜெயராமனின் வீட்டை சாந்தினியின் தாயார் நீலாவதி(60) பராமரித்து வந்துள்ளார். இவர் பகலில் மகள் வீட்டை பராமரித்து விட்டு இரவு தூங்குவதற்கு அவரது வீட்டிற்கு சென்றுவிடுவார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கம் போல சங்கரன் கட்டளையில் இருக்கும் வீட்டிற்கு நீலாவதி சென்றுவிட்டு நேற்று காலை சாந்தினியின் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல், கதவு, பீரோ ஆகியவை உடைந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நீலாவதி உடனடியாக திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது திருட வந்தவர்கள் பயன்படுத்திய கையுறை போலீசாருக்கு கிடைத்துள்ளது மேலும் மோப்ப நாயை வைத்து கண்டுபிடித்துவிட கூடாது என வீட்டு வாசலில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இது திட்டம்போட்டு நடத்தப்பட்ட திருட்டு என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் நீலாவதி பீரோவில் வைத்திருந்த 40,000 ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து பீரோவில் வேறு நகை ஏதேனும் இருந்ததா என சாந்தினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.