ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர என்ற கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் வெங்கடேஸ்வரா சாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. அங்கு இருக்கும் நடைமுறைப்படி ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா தம்பதியின் எட்டு வயது மகளான மௌனிகா என்பவரை வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு கல்யாண உற்சவத்தின் போதும் இது போன்ற சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் கோயில் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதி தாலிக் கயிற்றை எடுத்து சாமியின் திருவடியில் வைத்து ஆசி பெற்று, அந்த சிறுமியின் தாயாரிடம் கொடுக்கிறார். அந்த சிறுமியின் தாயார் மகளின் கழுத்தில் தாலியைக் கட்டினார். இப்படி திருமண உற்சவத்தில் இதுபோன்று சிறுமிகளின் கழுத்தில் தாலி கட்டப்படும். அவ்வாறு தாலி கட்டப்படும் சிறுமிக்கு இல்வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.