12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்து வதற்கு முன்பு மாணவர்கள் படிக்க நிச்சயம் போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு முன்பு படிப்பதற்கு நிச்சயம் கால அவகாசம் வழங்கப்படும் என்று கூறினார்.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 5 லட்சம் ஆசிரியர்களின் நிலைமை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு நிச்சயமாக எந்த காலத்திலும் தமிழகத்திற்குள் நுழைய விடப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.