சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து, காவலாளியை கட்டி போட்டு ரூ.1 1/4 லட்சம் மதுபாட்டில்களை அள்ளி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடி முத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்று ஊரடங்கு காரணமாக இரும்பு கம்பிகள் வைத்து யாரும் திறக்க முடியாத அளவுக்கு வெல்டிங் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்த காவலாளியான கண்ணன் என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கயிற்றால் கட்டி போட்டுள்ளனர். அதன் பின்னர் டாஸ்மாக் கடையை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தில் கொள்ளை போன மது பாட்டில்களின் மதிப்பு ரூ.1 1/4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து வந்த காளையார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதோடு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களின் கைரேகைகள் பதிந்துள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் காவலுக்கு இருந்தவரை கட்டிப்போட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.