தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது,உறவினர் பாதுகாவலில் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை காக்க “கண்மணிகளை காப்போம்” என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாக கோரிக்கை வைத்திருந்தேன். இக்குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் வைப்பு நிதி மற்றும் குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை வரவேற்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.