சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியரை தண்டிக்காமல் விட்ட பிஎஸ்பிபி பள்ளி மூடப்பட வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று நடிகர் விஷால் பேசியிருந்தார். இதற்கு நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், “நீங்களும் உங்கள் நண்பரும் எத்தனை பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து இருப்பீர்கள். உங்களைப் போன்றவர்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.