பல்லடம் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய அதிகாரிகள் வந்து இருந்தனர். அவர்களை சிறைபிடித்த விவசாயிகள் விவசாய நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஊர் மக்கள், அத்துமீறி நிலங்களுக்குள் புகுந்து உயர் மின் கோபுரங்கள் அமைக்க நில அளவீடு செய்து வருகிறார்கள். அதனை தட்டிக் கேட்டால் காவல்துறையை ஏவி அடிக்கிறார்கள். பெண்கள், வயதானவர்கள் என்று கூட பாராமல் தரதரவென இழுத்து கைது செய்வது மிகுந்த வன்முறையாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் உயர்மின் கோபுரங்களுக்கு மாற்றாக சாலையோரமாக கேபிள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை இல்லையெனில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.