மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து ஆறு மாத காலமாக விவசாய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவற்றை பிரதமர் திரும்ப பெற வேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மக்களின் போராட்டத்தை புறந்தள்ளியதில்லை என்றும், விவசாயிகளின் மரணத்திற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.