கத்தி முனையில் வாலிபரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று கும்பலில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள விளாத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி சாந்தமங்கலம் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை மீண்டும் தனது ஊருக்கு திரும்பியுள்ளார். அதன்பின் நடுபட்டி அய்யனார் கோவில் அருகில் வைத்து பிரபுவை 4 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரபு வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நடுப்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் நடுபட்டியைச் சேர்ந்த சுந்தரேசன், நித்தியன், மனோஜ், பொன்முத்து ஆகிய 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நித்தியனை மட்டும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து தலைமறைவாக இருக்கும் மீதமுள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.