மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருவதால் 2000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலுக்குப் பிறகு அங்கு அதிகளவு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தன.
தேர்தலுக்குப் பின் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்க அரசு கூறியுள்ளது. ஆனால் வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.