புதுச்சேரியில் கொலை செய்யப்பட்டு இறந்த நண்பனின் கல்லறையில் அவரது குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து எதிரிகளைப் பழி தீர்க்க சொல்லி பாடல் பாடி சபதம் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி திப்பு ராயப்பேட்டையை சேர்ந்த தீப்லான் என்பவர் கடந்த ஆண்டு முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தவித், கௌசிக் பாலசுப்பிரமணி, தணிகை அரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் தற்போது சிலர் பிணையில் வெளி வந்துள்ளனர்.
இந்நிலையில் தீப்லானின் பிறந்த நாளன்று அவரது கல்லறைக்கு நண்பர்களான ஆட்டோ மணி மற்றும் அவனது கூட்டாளிகள் சென்றுள்ளனர். அப்போது தீப்லானின் குழந்தை கையில் பட்டாக்கத்தி கொடுத்து கேக் வெட்டி கொலை செய்தவர்களை பழிவாங்க பாடல் பாடி சபதம் எடுத்தனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.