கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 75 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை, மார்க்கெட் மற்றும் வெளிப்புற கடைகளில் நேற்று அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதனையடுத்து நகராட்சி, சுகாதார துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 75 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.