தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி காய்கறி சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல். அதனால் உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.