கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை மூன்று நாட்களாக தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி அணைத்து வருகின்றனர்.
கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள பெலோபென்னீஸ் தீபகற்பத்தில் உள்ள காடுகள் அடர்ந்த பகுதியான கோரிந்த் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது. இதையடுத்து பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ பரவிய இடங்களை சுற்றிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயானது காற்றுடன் வேகமாக வீசியதால் கோரிந்த் பகுதியிலிருந்து தீயானது மேற்கு அட்டிகா பகுதியில் பரவியுள்ளது. மேலும் பைன் மரக்காடுகளில் 60 கிலோமீட்டர் வரை காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் மரங்கள் ஆயிரக்கணக்கில் தீயில் கருகியுள்ளது.
மேலும் சுற்றுலா விடுதிகளும், பல கடற்கரை ரிசார்ட்டுகளும் சேதமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக 62 தீயணைப்பு வண்டிகள், 270 தீயணைப்பு வீரர்கள், 3 ஹெலிகாப்டர்கள், 18 விமானங்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சுமார் 102 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுவதற்கு பருவநிலை மாற்றமானது ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.