இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமாக நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்திற்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தை சங்குபுரம் மூன்றாவது பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தைச் சுற்றிலும் தற்போது வீட்டு மனைகளை வாங்கி சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனையடுத்து சங்குபுரம் மூன்றாவது தெருவில் நாராயணன் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்தில் குழிதோண்டி உள்ளனர். அப்போது அங்கு வசிக்கும் சிலர் இந்த பகுதியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்து தோண்டப்பட்ட குழியை மூடியுள்ளனர்.
இதனை அறிந்த நாராயணின் உறவினர்கள் மயானத்திற்கு சென்று திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ராம்குமார் காவல் சூப்பிரண்ட் பாலசுந்தரம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களின் பேச்சு வார்த்தையை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தகவலறிந்த உதவி கலெக்டர் முருக செல்வி என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் தாங்கள் இந்த மயானத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று நாராயணின் உடலை அந்த மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். இவ்வாறு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.