தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கான சில அறிகுறிகள் இருந்தாலும் உடனே மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மக்கள் சிலர் மருத்துவமனை செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் சிறிய அறிகுறி இருந்தாலும் கொரோனா என்று உறுதி செய்து நம்மை மருத்துவமனையில் தங்க வைத்து விடுவார்களோ என்ற அச்சம் தான்.
அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் அதிக அளவு வசூல் செய்யப்படுவதாலும் மக்கள் பரிசோதனை செய்து கொள்ள தயங்குகிறார்கள். அதனால் இன்று காலை தமிழக அரசு, தமிழகம் முழுவதிலும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களின் முடிவுகள் வெளியாவதற்கு மிகவும் தாமதம் ஆகிறது.
அதனால் கொரோனா பரிசோதனை முடிவுகளை மக்களுக்கு விரைந்து தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக தடுப்பூசிகளை ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.